சென்னை

ரசு நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் போது தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக மின்வாரியம்  உத்தரவு இட்டுள்ளது.

அண்மையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.  தம்மை காண வந்த தொடர்களை பார்க்க அவர் விமான நிலைய வாயில் அருகே காரை நிறுத்தியபோது மின் தடை ஏற்பட்டது.   ஆயினும் அமித்ஷா சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்த பிறகு வாகனத்தில் ஏறிச் சென்றார்.

பிறகு பாஜகவினர் திட்டமிட்டு இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது தமிழக மின் வாரியம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போதும், பிரதான அரசு நிகழ்வுகளின்போதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல மின்சார பொறியாளர்களுக்கும் மின்வாரிய நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களைப் பொறியாளர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் அதனை உடனே நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். நிகழ்வு நடைபெறும் இடங்களில் பொறியாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அந்தச் சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளன.