சென்னை: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவியினால், காலிறுதிப் போட்டியில், இந்திய அணியின் விஸ்வநாதன் ஆனந்த் தனது பங்களிப்பை தடையின்றி செய்ய முடிந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காலிறுதிப் போட்டி நடைபெற்ற தினத்தன்று, விஸ்வநாதன் ஆனந்தின் இல்லம் அமைந்த கோட்டூர்புரம் பகுதியில் மின்சார தடை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அவரின் போட்டிக்கு இடையூறு ஏற்படும் என்ற நிலை இருந்தது.
அவரின் இல்லத்தில் ஜெனரேட்டர் இருந்தாலும்கூட, ஏதேனும் இடர்பாடு ஏற்படலாம் என்ற கவலை ஏற்பட்டது. எனவே, இந்த விஷயத்தில் அணியின் கேப்டன்(போட்டியில் பங்கேற்காத) ஸ்ரீநாத், இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, மாலை 5 மணிக்குள் மின்சார விநியோகத்தை மீண்டும் துவங்கிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு மின்சார வாரியம் அதற்கேற்ற ஏற்பாடுகளை மேற்கொண்டு, போட்டியின்போது மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. இதன்மூலம், ஆனந்த் எந்தக் கவலையுமின்றி ஆட்டத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது.