சென்னை: நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை இந்திரா காந்தி பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லை,  அவரது பெருமை புரியாமல் அண்ணாமலை பேச வேண்டாம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரதமராக இருந்து எமர்ஜென்சி பிரியடு அமல்படுத்தப்பட்டது,  இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில்,  திமுக ஆட்சி கலைக்கப்பட்டதுடன், தற்போதைய  முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நாள்  கருப்பு தினம் என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அண்ணாமலை கூறியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார்.  நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

இவ்வாறு கூறி உள்ளார்.

முன்னதாக நேற்று ( ஜுன் 25)  பாஜக தலைமையகமான கமலாலயத்தில்  நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசினா,  பிப்ரவரி 14 என்ன நாள் என்பது இளைஞர்கள் அனைவருக்கும் தெரியும் எனவும், ஆனால் எமர்ஜென்சி எப்பொழுது கொண்டுவரப்பட்டது, ஏன் கொண்டு வரப்பட்டது என கேட்டால் எவருக்கும் தெரியாது என தெரிவித்தார். அதை தமிழகத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும், அதற்கு பாஜக தற்போது ஒரு முன்னெடுப்பு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைப் பார்த்து இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவதாகவும், அரசியல் சாசனம் குறித்து பேச காங்கிரஸுக்கு அருகதையே இல்லை எனவும் தெரிவித்தார். நேரு குடும்பம் இந்தியாவில் இருந்து வெளியேறி இருந்தால் இந்தியாவின் வளர்ச்சி மேலோங்கி இருந்திருக்கும் என  கூறியதுடன்,   1971ஆம் ஆண்டு 14 தனியார் வங்கிகளை ஒரே இரவில் பொதுவுடமை ஆக்கியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என குற்றம் சாட்டினார்.

இந்தியா என்பது இந்திரா காந்திக்கு சேவை செய்வதற்காக மட்டுமே இருந்துள்ளதாக விமர்சித்தவர், இப்போது  அரசியலமைப்புச் சட்டம் குறித்து பேசும் அவர்கள் தான் அதிக அளவில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, வெறும் 8 முறை மட்டுமே சட்டத் திருத்தங்களை மக்கள் நலனுக்காக கொண்டு வந்துள்ளதாக கூறிய அண்ணாமலை,  இந்த முறை 21 கட்சிகள் இணைத்து 230 தொகுதிகளில் மட்டும்தான் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், பாஜக இந்த தேர்தலில் தனியாக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.