ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கியது மற்றும் அவரது எம்.பி. பதவி பறித்தது ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.

காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் நாளை சத்தியாகிரக போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருக்கிறார்.

அதானி பங்கு வர்த்தக மோசடி தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதானி தொடர்பான அவரது பேச்சுக்களை பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கியதோடு நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த மோடி குடும்பப்பெயர் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியான மறுநாளே அவரது எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கமுடியாமல் செய்துள்ளனர்.

ஆளும் பாஜக அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை சத்தியாகிரக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற இருக்கும் இந்த சத்தியாகிரக போராட்டத்தில் கே.எஸ். அழகிரி பங்கேற்பார். இதேபோல் மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.