சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. செல்வப் பெருந்தகையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மக்கள் நெருக்கம் மிகுந்த பெரம்பூர் பகுதியில் மாலை நேரத்தில் ஒரு கும்பலால் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தமாகா என பல கட்சிகளை சேர்ந்தவர்களும் , ஏராளமான ரவுடிகளும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக, இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன்,ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி மற்றும் ராஜேஷ், கோபி, குமரன் மற்றும் திருவேங்கடம் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கொலையில் மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், இது அரசியல் கொலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பட்டியலினத்தவர் யாருக்கு ஆதரவு என்ற போட்டியிலும் இந்த கொலை நடைபெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அதில், “பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்.
செல்வபெருந்தகை புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்.” அவருக்கும் இந்த கொலைக்கு சம்பந்தம் உள்ளது. “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை என்றும் கூறுகின்றனர். அதனால், அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்” என்றும்,
செல்வ பெருந்தகை மீது ஏற்கனவே ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி இருப்பதுடன், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்துறைகளை கட்டுப்படுத்தும் ஒருவன்முறை கும்பலின் தலைவர்தான் வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன். அவருடைய மகன், இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளராக இருந்த அஸ்வத்தாமன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இளைஞர் காங்கிரஸில் நியமித்தது செல்வப்பெருந்தகைதான் என்று சுட்டிக்காட்டி உள்ளதுடன், செல்வபெருந்தகை, காங்கிரஸ் மாநில தலைவராக இருப்பதால் அவரை கைது செய்ய அரசும், காவல்துறையும் தயங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே,மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தொடரும் கைதுகள் _ 28ஆக உயர்வு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது