டில்லி:

கவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் மூலம், கூட்டாட்சித் தத்துவம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடி உள்ளார்.

மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்க கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனார்.

ஆனால், மோடி அரசோ எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை உதாசினப்படுத்தி வருகிறது. மக்களவையில் பெரும்பான்மை  பலத்துடன் உள்ள  பாஜக,  தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. ஆனால்,  மாநிலங்களவையில், பெரும்பான்மை இல்லாத நிலையில், அங்கு நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், இந்த சட்டத் திருத்தம் மூலம் கூட்டாட்சித் தத்துவம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டுள்ளது என்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மன்மோகன் சிங் தலைமையில் 2004-ல் அமைந்தவுடன் எடுத்த மிகமிகப் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஒளிவு மறைவை ஒழித்து வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டது.

மத்திய – மாநில அரசுகள் மற்றும் அதைச் சார்ந்த பல்வேறு துறைகளில் நடக்கிற எந்த நடவடிக்கை களையும் சாதாரண குடிமக்கள் உரிய முறையில் விண்ணப்பித்து மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி 30 நாட்களுக்குள் தகவல் பெறுகிற உரிமையை அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியது.

இதுவரை இச்சட்டத்தை 70 லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். 2014 -ல் 2 லட்சம் கோரிக்கை கள் இந்த அமைப்புக்கு அனுப்பப்பட்டது. அது தற்போது 16 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே எழுந்துள்ள விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. இதை மத்திய ஆட்சியாளர் களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

நரேந்திர மோடி அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது அதனால் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? எவ்வளவு பணம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்தது? என்ற கேள்வி கள் எழுப்பப்பட்ட போது அதற்குரிய பதிலை மத்திய அரசு வழங்கவில்லை.

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, மத்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 99 சதவீதம் திரும்ப வந்து விட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வெளிவந்தது.
அதேபோல, பன்னாட்டு நிறுவன முதலாளிகள் கனிம வளங்களை கொள்ளையடிப்பது முற்றிலும் தடுக்கப்பட்டது. மக்களுக்குப் பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் வழங்குகிற நிதியுதவி திட்டங்கள் அனைத்தும் முறையாக மக்களுக்குச் சென்றடைவதற்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய கருவியாக அமைந்திருக்கிறது.

மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்ததில் 93 சதவீதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டது என்கிற தகவலும், இச்சட்டத்தின் மூலம் வெளிவந்ததுள்ளது. இந்த வகைகளில் தகவல்கள் வெளிவருவதை நரேந்திர மோடி அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படாமல் முடக்குகிற பணியை பாஜக அரசு செய்து வந்தது. 2018-ல் மொத்தமுள்ள 11 தகவல் ஆணையர் பதவிகளில் 8 பதவிகள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டது. இதுகுறித்து கடும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல, தகவல் ஆணையரிடம் 26,000 மனுக்கள் மேல் முறையீட்டுக்காக நிலுவையில் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்த அமைப்பை முடக்கி வைக்கிற பணியை பாஜக செய்து வந்தது.

கடந்த 2018-ல் நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்துகிற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது பாஜகவுக்கு உள்ள அசுர பலத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 13, 16 மற்றும் 27 இல் திருத்தங்கள் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதை எதிர்த்து  சோனியா காந்தி கடுமையாக மக்களவையில் உரையாற்றியிருக்கிறார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தத்தின் மூலம் முதன்மைத் தகவல் ஆணையர், மாநிலங்களில் தகவல் ஆணையர்களின் பணிக்காலம், ஊதியம் ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி முதன்மை தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது இவற்றில் எது முந்தையதோ, அதுவரையில் தொடரும்.

மேலும், முதன்மைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் முறையே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி நிர்ணயிக் கப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்தத் திருத்தத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை தகர்க்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தகவல் ஆணையர்களாகவும், தகவல் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படப் போகிறவர் களின் பதவிக் காலம், ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசே நிர்ணயிக்க இச்சட்டம் வழிவகுத் திருப்பதால் இனி தாங்கள் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் எப்படி செயல்பட வேண்டும், ஆளும் ஆட்சியாளர்களுக்கு கோபம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டால் என்ன விளைவு களைச் சந்திக்க நேரிடும், என்பதெல்லாம் நியமிக்கப்படுபவர்களுக்கு இச்சட்டத் திருத்தம் உணர்த்துகிறது.

அதேபோல, மாநிலத் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், ஊதியம் ஆகியவற்றையும் மத்திய அரசே நிர்ணயிக்கும் இத்திருத்தம் கூறுவதன் மூலம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கூட்டாட்சித் தத்துவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிமுக அரசு தனது எதிர்ப்பை இதுவரை வெளிப்படுத்தவில்லை.

எனவே, இந்தியாவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கையாக கருதப் பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்க்கிற வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இத்திருத்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

இந்தத் திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில் விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.