சென்னையில் நடைபெற்ற இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்து வெயில் தாங்கமுடியாமல் இறந்து போன 5 பேரின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
தவிர, இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியைக் காண 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மெரினா கடற்கரையில் திரண்டனர்.
பட்டினப்பாக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை சுமார் 6 கி.மீ தூரத்துக்கும் சாலையில் ஆங்காங்கே நின்று இந்த சாகச நிகழ்ச்சியை பலரும் வேடிக்கைப்பார்த்தனர்.
350 மீட்டர் அகலம் கொண்ட மெரினா மணற்பரப்பு தவிர அதேயளவுக்கு மெரினா சர்வீஸ் சாலை, காமராஜர் சாலை மற்றும் அதை ஒட்டிய சந்துகள் மற்றும் கட்டிடங்கள் மீது ஏறி மக்கள் ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
பிற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் வெயிலின் கடுமை தாங்கமுடியாமல் சுமார் 230 பேர் மயக்கமடைந்தனர்.
மெரினா சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்களில் 93 பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே 5 பேர் உயிரிழந்தனர் அதில் நான்கு பேர் நீர் சத்து குறைந்ததாலும் ஒருவர் நெஞ்சுவலி காரணமாகவும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்து வெயிலின் கடுமையால் உயிரிழந்த 5 பேருக்கு முதற்கட்டமாக தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.