சென்னை: தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5.56 டோஸ் தடுப்பு மருந்துகள் சீரம் நிறுவனத்தில் இருந்து வந்துள்ளன. இவை முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், சுகாதாரதுறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வரும் 16ந்தேதி பயன்பாட்டுக்கு வருகிறது. இதன் காரணமாக, புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்கட்டமாக தமிழகத்திற்கு புனேவில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 5,56,000 டோஸ் தடுப்பு மருந்துகள் இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அந்த மருந்துகள் அனைத்தும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், குளிரூட்டப்பட்ட வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள ஸ்டோரேஜ் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் எனவும், ஒருவருக்கு 2 டோஸ் மருந்துகள் போடப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேபோல், யாருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்படும் என கூறியவர், வழிகாட்டு நெறிமுறைபடியும், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் முதல்கட்டகமாக மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.