சென்னை:

ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம்,  அன்வர்ராஜா மீதான வழக்கை சிபிஐ  விசாரிக்கலாம் என உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதன் தலைவராக தற்போதைய ராமநாதபுரம் தொகுதி  எம்.பி. அன்வர் ராஜா இருந்து வருகிறார். வக்ஃபு வாரியத்தில் பல்வேறு முறைகேடு, ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும்,  தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாகவும்  புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து  சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்திருந்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்வர்ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, அன்வர் ராஜா மீதான வழக்கை  சிபிஐ விசாரிக்கலாம் என  அதிரடி உத்தரவு வழங்கியது.

சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரியத்துக்கு அதிமுக எம்.பி. அன்வர் ராஜா தலைவராக இருக்கிறார். மேலும், தமிழக அமைச்சர் நிலோபர் கபில் உள்பட சிலர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு முறைகேடு நடைபெற்றது குறித்து, கடந்த மார்ச் மாதம் 22 ந்தேதி  மண்ணடியில் உள்ள வஃபு வாரிய  தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.  மேலும் அன்வர் ராஜா எம்.பி.யி டமும் சிபிஐ விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.