சென்னை

பி எஸ் 4 குறியீட்டுக்கு ஏற்ப 2,214 டீசல் பேருந்துகளும் 500 மின்சார பேருந்துகளும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் என ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

நேற்று தமிழக சட்டப்பேரவையில் துறைரீதியான மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடந்தது.  இந்த விவாதத்தின் போது போக்குவரத்துத் துறை சார்பாக அந்த துறையின் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசினார்.   அப்போது அவர்  புதிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர், “தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் கூடுதல் வருவாய்க்காக பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் நிறுவப்பட உள்ளன.

மேலும் அரசு போக்குவரத்து நிறுவனங்களின் கட்டடங்களின் கூரையில் சூரிய சக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவுவதோடு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.

தமிழகத்தில் புதியதாக பி.எஸ்-4 (BS – IV) குறியீட்டிற்கு இணக்கமான, இரண்டாயிரத்து 213 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

மக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வராமலேயே பழகுனர், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகளைப் பெறுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தவிர திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மோட்டார் ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிய பகுதி அலுவலக கட்டடம், மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் மற்றும் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கோயம்புத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் சொந்தக் கட்டடம் கட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.