சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விநாயகர் சிலைகள் இயற்கை பொருட்களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைப்பது குறித்தும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் விநாயக சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தற்காலிக விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர், அவை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, குளம், குட்டை, ஆறு, நதி, கடல் என நீர்நிலைகள் கரைக்கப்படும்.
இந்த நிலையில், விநாயகர் சிலைகள் தயாரிப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு, ஏரி மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன.
அவற்றைப் பாதுகாக்க, விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, நீர்நிலைகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத களி மண் போன்ற மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.