சென்னை

மிழக அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. கூட்டத்தில், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, தொழில் துறை செயலர் கிருஷ்ணன், நிதித் துறைச் செயலர் முருகானந்தம், பொதுத் துறைச் செயலர் ஜகந்நாதன் மற்றும் உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்களும் பங்கேற்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழில் துறை தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.  அண்மையில் ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளுக்குத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயணம் மேற்கொண்டு, பல்வேறு தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அந்த நாடுகளின் தொழில் வர்த்தக அமைச்சர்கள், கூட்டமைப்புகளுடனும் முதலீடு தொடர்பாகப் பேசியுள்ளார். இத்தகவல்கள் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான அனுமதிகளை வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.   இம்மாத இறுதியில் முதல்வர்  அரசுமுறை பயணமாக லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வது, மேலும் அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.