சென்னை,
உடன்குடி அனல்மின் நிலையம் இன்னும் 3 ஆண்டுகளில் தனது உற்பத்தியை தொடங்கும் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
கடந்த 2011 ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருக்கும் போது துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின் நிலையம் கட்டப்படும் என அறிவித்தார். ஆனால், பின்னர் பல காரணங்களால் அப்பணி தொடங்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்க தமிழக மின் வாரியத்துக்கு மத்திய அரசு ரூ.10,453 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று அமைச்சர் தங்கமணி முன்னிலையில் சென்னையில் கையெழுத்தானது.
அதன்படி , தமிழக மின்வாரியம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஒப்பந்தப்படி உடன்குடியில் இரண்டு நிலைகள்க அமைக்கப்பட இருப்பதாகவும், ஒவ்வொன்றிலும் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அனல்மின் நிலைய கட்டுமாணப் பணிகளை மத்திய அரசின் பெல் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
கட்டுமானப் பணி செலவினங்களுக்கான தமிழக மின்வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.10,453 கோடி கடன் வழங்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் தலைவர் ரமேஷ். தமிழக மின்வாரிய முதன்மை செயலாளர் விக்ரம்கபூர், சேர்மன் சாய்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, கடந்த 6 ஆண்டில் தமிழக மின்வாரியம் மின்சார உற்பத்தியில் அபரீத வளர்ச்சி பெற்றுள்ளதாவும், மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு ஜூன் 2015 முதல் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மேலும், தமிழக மின்வாரியத்திற்கு 2013-14ல் ரூ.13,985 கோடியாக நஷ்டம் 2016-17ல் ரூ.1,400 கோடியாக குறைந்துள்ளது என்றும், தற்போது மின்தேவை நாள் ஒன்றுக்கு 14,000 மெகாவாட் ஆக உள்ளது. இது 15,500 மெகாவாட் ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 2023ம் ஆண்டுக்குள் மின்தேவை 23,350 மெகாவாட் ஆக அதிகரிக்கும் என்றும், அதற்கேற்ப உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், அதன் முன்னேற்பாடுதான் இந்த ஒப்பந்தம் என்று கூறினார்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, உடன்குடி அனல்மின் நிலைய கட்டமைப்புக்காக ரூ. 10,453 கோடி கடன் வழங்க ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் 2 அலகுகள் அமைக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் 1320 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்று கூறினார்.