சென்னை
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரச் பழைய ஓய்வூதிய திட்டம் தமிழக அரசின் பரிசிலனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. பிறகு இவற்றின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
பிறகு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையொட்டி மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன. நாடாளுமன்ற தேர்தல் தற்போது முடிவடைந்ததையடுத்து கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு அவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம், ஏனைய ஓய்வுகால நன்மைகள் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், சாத்தியக்கூறுகளை ஆராய அமைத்த குழு பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.