செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கத் தேவையான அனைத்து சிறப்புகளும் உள்ளதாக கோட்டையை ஆய்வு செய்த UNESCO குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து UNESCO குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
உலக சுற்றுலா தினமான நேற்று (செப்டம்பர் 27) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக செஞ்சி-க்கு வந்த UNESCO குழுவினரை மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தினர் வரவேற்று செஞ்சி கோட்டையை ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் செஞ்சி மஸ்தான், “நம் பெருமைமிக்க செஞ்சி கோட்டையை நேற்று UNESCO குழுவினர் ஆய்வு மேற்க்கொண்டனர்.
கலந்துரையாடலின் போது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியது இந்த செஞ்சி கோட்டை என UNESCO குழுவினர் சொன்ன போது அகம் மகிழ்ந்தோம்” பதிவிட்டுள்ளார்.
மேலும், நம்ம கோட்டை நம்ம பெருமை என்று பதிவிட்டுள்ள அமைச்சர் மஸ்தான், UNESCO குழுவினரின் ஆய்வுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.