சென்னை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விதிகளைத் தளர்த்தி மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர நாடெங்கும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு இரு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும் கொரோனா பரவுதல் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. டில்லியில் இருந்து நாட்டின் பல நகரங்களுக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. தமிழகத்துக்கு வெலி மாநிலங்களில் இருந்து வரத் தொடங்கி உள்ளதால் அதற்கான விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதன்படி வெளி மாநிலத்தில் இருந்து வருவோர் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டுப் பாதிப்பு உறுதி ஆனவர்களை மருத்துவமனையில் சேர்க்கவும் பாதிப்பு இல்லாதவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கவும் உத்தரவு இடபட்ட்டுள்ளது.
நாளையுடன் ஊரடங்கு முடிவடைவதை ஒட்டி தமிழக முதல்வர் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். மூன்று மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் பரிசோதனைகளை அதிகரிக்க யோசனை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தப்பட்ட விதிகளுடன் நீட்டிக்க உள்ளதாகக் கூறப்படுவது குறித்தும் விவாதிக்கபட்டுள்ளது
எனவே தமிழக அரசு ஊரடங்கு விதிகளை வெகுவாக தளர்த்தி விட்டு ஊரடங்கை நீட்டிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும் பேருந்துகள், ஜிம்கள், மால்கள், திரையரங்குகள் இயங்காது எனவும் கூறப்படுகிறது. அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் வாரத்தில் ஆறு நாட்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.