சென்னை
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணைய இணைப்பை ரத்து செய்துள்ளதோடு 33 லட்சம் மொபைல் சந்தாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி பலர் தங்கள் பணிகளை இழந்தனர். பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்தன. இது அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் அதிகம் உள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் அதிகம் உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சுமார் 6 லட்சம் இணைய இணைப்புக்களை இழந்துள்ளன. அத்துடன் 33 லட்சம் மொபைல் இணைப்புக்களுக்கு சந்தா அளிக்கப்படாததால் அவையும் இணைப்புக்களை இழந்துள்ளன. அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் 4% அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் 8.1 கோடி பேர் மொபைல் சந்தாதாரர்களாக இருந்தனர். ஆனால் மூன்றே மாதங்களில் இது 7.8 கோடியாகக் குறைந்து 33.5 லட்சம் இணைப்புக்களைத் தொலைத் தொடர்பு நிறுவனம் இழந்துள்ளது. இதைப் போல் லாண்ட் லைன் தொலைப்பேசி இணைப்புக்களிலும் 52000 இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துக்குப் பிறகு மீண்டும் பி எஸ் என் எல் மொபைல் இணைப்பு எண்ணிக்கை 7.7 லட்சமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்துக்குப் பிறகு 28 லாண்ட்லைன் இணைப்பு மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்கள் எனக் கூறப்படுகிறது. தற்போது அது மேலும் அதிகரித்து வருவதாகத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.