சென்னை:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய இணையதள சேவையை தொடங்கி உள்ளது. http://stopcoronatn.in/ என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து தங்களது சந்தேகங்கள் மற்றும் புகார்களை பதிவு செய்யலாம்…

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தில்  கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களின் விசாரணைகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

24 மணி நேரமும் இயங்கும் இந்த இணையதளம் மூலம், மக்கள் கொரோனா வைரஸ் அறிகுறி மற்றும் அவர்களுடைய முந்தைய பயணங்கள் குறித்து  கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம்.

இந்த இணையதளம் தேசிய சுகாதார பணிகள் – தமிழ்நாடு மூலம் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு பொது சுகாதார இயக்குநரகம் (டிபிஹெச்) மற்றும் தடுப்பு மருத்துவப்பிரிவு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.

இந்த இணைய போர்டல் இந்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, மாநில அரசின் ஆலோசனைகள், செய்திகள் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் தினசரி தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த போர்டலில் பொதுமக்கள் பயண ஆலோசனைகள் பற்றிய தகவல்களை பெறலாம். பொதுமக்களுக்கான டிபிஹெச் ஹெல்ப் லைன்களும் போர்ட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், பொது மக்கள் இந்த இணையப் போர்டலில் மக்களே புகார் அளிக்கலாம். புகார்களை பதிவு செய்யலாம்.

கொரோனா வைரஸ் பற்றிய விசாரணைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த போர்டலில் பொதுமக்கள் மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒடிபியுடன் உள்ளே நுழைந்து அவர்களாகவே கொரோனா வைரஸ் பற்றி புகார் அளிக்கலாம்.

இந்த போர்டல் குறித்து கூறிய ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயங்நதி, “யாராவது கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்திருந்தால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கலாம் என்று சந்தேகித்தால், அவர்கள் போர்ட்டலில் தாங்களாகவே புகார் செய்யலாம். அவர்களுடைய மொபைல் எண்களைப் பயன்படுத்தி புகார்களை பதிவு செய்ய முடியும். அதன் பிறகு டிபிஹெச்சில் உள்ள கட்டுப்பாட்டு அறை அவர்களுடன் தொடர்பு கொள்ளும” என்று கூறினார்.

சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறை ஹெல்ப் லைன்களுக்காக 10 இணைப்புகளைப் பெற்றுள்ளது. இதில் மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அனைத்து கருத்துகளுக்கும் விசாரணை களுக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் பொதுமக்களுக்கு பதில் அளிக்கப்படும்.

மாவட்ட அதிகாரிகள், மருத்துவ டீன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் ஆகியோர், வீட்டு தனிமைப்படுத்தல், தனிமைப்படுத்தப்பட்ட வசதி கணக்கெடுப்பு, தனி வார்டு நோயாளிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு, தற்போதைய கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு, முக கவசங்களின் இருப்பு விவரங்கள், N95 முக கவசங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்த இணையதளத்தில், கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து தகவல்கள், கல்வி, தகவல் தொடர்பு பொருட்கள், கைகளை எவ்வாறு கழுவுவது, இருமும்போது எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மாநில மருத்துவக் குழுவின் வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.