திருவாரூர்
தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தற்போது கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் திருவாரூர் மாவ்பட்டம் கோட்டூர் ஆரம்பச் சுகாதார நிலைய வளாகத்தில் கட்டுப்பட்டுள்ள புதிய கட்டிடங்களைப் பார்வையிட்டார். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர், “தமிழக நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் முதல் அறிவிப்பு திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் அறிவிப்பு எண் 42-ன் படி தமிழகத்தில் இருக்கின்ற 2,127 ஆரம்ப சுகா தார நிலையங்களில் காலை 7 மணி முதல் நீரிழிவு நோய்க்கான ரத்த மாதிரி பரிசோதனை திட்டம் இன்று (நேற்று) முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளாவில் பரவியுள்ள தக்காளி காய்ச்சல் கிருமியால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இந்த வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நோய்த் தொற்று நோய் வகையானது இல்லை என்ற போதிலும் கேரளா- தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.