சென்னை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கடந்த 2019ஆம் ஆண்டு முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து, அருகில் இருக்கும் முக்கிய ரயில் நிலையமான எழும்பூருக்கு  முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எழுதிய கடிதத்தில் இதே கோரிக்கையை விடுத்திருந்தார்.  மேலும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் உரையாற்றிய எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமனும் எழும்பூர் ரயில் நிலையத்திற்குக் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற திமுக வர்த்தகர் அணி கூட்டத்திலும், இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று பெங்களூருவில் கர்நாடக மாநில திமுக குழுக் கூட்டம் அவைத் தலைவர் மொ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையிலுள்ள எழும்பூர் ரயில் நிலையத்திற்குக் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இவ்வாறு எழும்பூர் ரயில் நிலையத்துக்குக் கருணாநிதி பெயர் சூட்ட தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.