தைவானைச் சேர்ந்த ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (ஃபாக்ஸ்கான்) நிறுவனம் தமிழகத்தில் புதிதாக 1600 கோடி ரூபாய் முதலீட்டில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஃபாக்ஸ்கான் க்ரூப்பின் தலைவர் யங் லியுவையும் அவரது அணியினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொபைல் போன் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான முதலீட்டு உத்தரவாதம் எனது முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
மின்னணு வாகனம், எலெக்ட்ரானிக் பொருட்கள் ஆகிய துறைகளில் கூடுதல் முதலீடு குறித்தும் விவாதித்தோம். ஆசியாவின் எலெக்ட்ரானிக் உற்பத்திக் கேந்திரமாக தமிழ்நாட்டை உருவாக்கும் லட்சியத்தில் இது ஒரு மைல் கல்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.
இதனையடுத்து தமிழக அரசுடன் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்று விளக்கமளித்தது.
இந்த விளக்கத்தை அடுத்து செய்தி வெளியிட்ட அதே ஊடகங்கள் தமிழக அரசு ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்று செய்தி வெளியிட்டன.
இதனால் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா-விடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
Foxconn Industrial Internet (FII) என்ற சீன நிறுவனத்திற்கும் Hon Hai Technology Group (FOXCONN) என்ற தைவான் நிறுவனத்திற்கும் வேறுபாடு தெரியாமல் ஊடகங்களில் வெளியான தவறான தகவலால் இந்த குழப்பம் ஏற்பட்டதாகவும், தமிழக அரசு Hon Hai Technology Group (FOXCONN) என்ற தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.