சென்னை,
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் அநேக பகுதிகளில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்து உள்ளது.
இதன் காரணமாக , மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், காப்பாற்றவும், தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் தமிழகத்தில் சென்னை, கடலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்தவருடம் வெள்ள பாதிப்பால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தமிழக பேரிடர் மேலாண்மை குழுவை அமைக்க உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, தமிழக அரசின் வருவாய்த்துறை கமிஷனர் சந்திரமோகன் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் திருமலைவாசன், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் தேவேந்திர ஜலிஹல், திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி கழக பேராசிரியர் மோசஸ் சாந்தகுமார், ஓய்வு பெற்ற தலைமை என்ஜினீயர்கள் முரளிதர் ராவ், வி.ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரி குகானந்தம் உள்பட 18 பேர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், கடந்தமாதம் 28ந்தேதி சென்னை எழிலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்தின்படி, தமிழக வெள்ள பாதிப்பை சமாளிப்பது தொடர்பாகவும், மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து, தமிழக அரசு வெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படும் பகுதிகளில், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.
அதன்பேரில், வருகிற வெள்ளிக்கிழமை முதல் மீட்பு குழுவினர், கடந்த வருடம் வெள்ளம் பாதித்த பகுதிகளான சென்னை, கடலூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவிடம், வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை மீட்க தேவையான உபகரணங்களுடன், சிறு படகுகளும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மழையின் தாக்கம் அதிகரித்தால், அதற்கு தகுந்த வாறு கூடுதல் படைகளை அழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளனர்.