சென்னை
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப்பாதைகளுக்கு சுகாதார இயக்குநர் தடை விதித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளது. இதையொட்டி மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் காய்கறி சந்தைகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு மக்கள் பலர் ஒரே நேரத்தில் செல்ல நேரிடுகிறது. இதனால் கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது.
இதைத் தடுக்க பொதுப்பணித்துறை காய்கறிச்சந்தைகள் மற்றும் மருத்துவமனைக்குள் வருபவர்களுக்காகக் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைத்தது. இதன் உள்ளே நுழைந்து வருவோர் மீது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. இதற்கு மக்களிடையே வரவேற்பு இருந்த போதிலும் உலக சுகாதார அமைப்பு இதை அமைக்க வேண்டாம் என அரசுக்கு தெரிவித்தது
அதையொட்டி தமிழக சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,”கிருமி நாசினி சுரங்கங்கள் மக்களை கை கழுவும் பழக்கத்தில் இருந்து திசை திருப்பி தவறான பாதுகாப்பு எண்ணத்தை அளிக்கிறது. இங்குப் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் மற்றும் குளோரின் உள்ளிட்ட பொருட்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே சுரங்கப்பாதைகள் தடை செய்யப்படுகின்றன” என அறிவிக்கப்பட்டுள்ளது.