கன்னியாகுமரி:

ன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் நேற்று உயிரிழந்தனர். இந்த 3 பேரின் மரணம் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அவர்கள் 3 பேரும் பல்வேறு நாட்பட்ட நோய்கள் தாக்கத்திற்கு ஆளானவர்கள். எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், என ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். சுகந்தி ராஜகுமாரி தெரிவித்து இருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 வயது ஆண் குழந்தை உட்பட 3 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். சுகந்தி ராஜகுமாரி கூறுகையில், “ஏற்கனவே மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் மரணம் அடைந்தனர். அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இன்று கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 3 பேர் மரணம் தொடர்பாக அதிக வதந்திகள் பரவி வருகிறது. மரணம் அடைந்த 3 பேரும் பல்வேறு நோய்களின் தாக்கத்துடன் அனுமதிக்கப்பட்டவர்கள். மரணம் அடைந்த மரிய ஜான் (66) கிட்னி செயல் இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார். மரணம் அடைந்த மற்றொரு நபர் ராஜேஷ் (24) மூச்சு திணறல் காரணமாக கடந்த சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தவர். மரணம் அடைந்த இரண்டு வயது குழந்தைக்கு பிறவி சுவாச குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இவர்கள் மூன்று பேருக்கும் கோரோனா இல்லை என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இன்று மாலை அவர்கள் 3 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்து விடும்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்100 படுக்கை அறைகள் கொண்ட எமெர்ஜென்சி மருத்துவமனை தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பாதிப்பை கண்டறியும் பரிசோதனை மையம் அமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். அது அமையும் பட்சத்தில் கோரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரியும். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை என தெரிவித்து இருந்தார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஊடகங்களிடம் கூறுகையில், “கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் உயிரிழந்த 3 பேருக்கும் ஏற்கெனவே வேறு உடல் நலப் பிரச்னைகள் இருந்தன. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இலை. இறப்பிற்குப் பிறகு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும். நேற்று மாலையில் முடிவு தெரியும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.