உணவகங்கள் மற்றும் உணவு வகைகள் குறித்து ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான ஃபுட் ரிவ்யூவர் இர்பான் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், அமைச்சர்கள் மட்டுமன்றி ஆளுநர் என அனைவருடனும் உணவருந்தியவாரே நேர்காணல் செய்து தனது ‘இர்பான் வியூஸ்’ சேனல் மூலம் வைரலாக வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில் தான் விரைவில் தந்தையாகப் போவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள அவர் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தையும் வெளியிட்டுள்ளார்.

கருவிலேயே குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்வதும் அதை அறிவிப்பதும் இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்ற நிலையில் இதை அறிந்து கொள்வதற்காக தனது மனைவியை ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய்க்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ள இர்பான் அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு சர்ச்சையானதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.