சென்னை
பதிவு வரிசையைத் தாண்டி பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் கட்ட சுகாதார பணியாளர்கள் என்னும் வரிசையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசிகள் போடும் பணி அரசு மருத்துவமனைகளில் தொடங்கி அதன்பிறகு அந்த பணி தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள அப்போலோ தலைமை, எஸ் ஆர் எம் செண்டர், எம்ஜிஎம் மருத்துவமனை, சுந்தரம் மெடிகல் ஃபவுண்டேஷன், காவேரி மருத்துவமனை, சிம்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை என 7 மருத்துவமனைகளும் அடங்கும். பதிவு வரிசைப்படி மட்டுமே தடுப்பூசி போட வேண்டும் என அரசு உத்தரவு இட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் பதிவு வரிசையைத் தாண்டி கொரோனா ஊசிகள் ஒரு சில பிரபலங்களுக்குப் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதில் ஒரு நடிகரும் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுளார். அது சமூக வலைத் தளங்களில் பலராலும் பரப்பப்பட்டதால் கேள்விகளை எழுப்பியது.
இதையொட்டி தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பதிவு வரிசையை மீறி தனியார் மருத்துவமனைகள் பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அது உண்மையாக இருந்தால் அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சென்னை மாநகராட்சியின் சுகாதார நலத் துணை இயக்குநர்கள் மற்றும் நகர சுகாதார அதிகாரிகள் இவற்றைக் கண்காணிக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.