திருச்சி

மிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமை, திறன், திராணி உண்டு என மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் எதிர்ப்பு மாநில மாநாடு நடந்தது   இதில் ”நீட் தேவு விலக்கு தீர்மானத்துக்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.  தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்து கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.  தவிர மாணவர்கள் தற்கொலைக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் “ எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் தனது உரையில் “தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான உரிமையும், திறனும், திராணியும் உண்டு.   சமூக நீதியை முன்னோக்கி நகர்த்துவது போராட்டங்கள் ஆகும்..  மக்களுக்கு நாட்டில் வழங்கப்பட்ட ஒவ்வொரு உரிமைக்குப் பின்னாலும் நிச்சயமாகப்  போராட்டம் இருக்கும்.

மொத்தத்தில் நீட் தேர்வு, மாநில உரிமைகள்- கல்வி உரிமைகளைக் குத்திக் கிழிப்பதாகவும், கற்பித்தலைக் கொன்று, தனிப் பயிற்சி வகுப்புகளைக் கொண்டாடுவதாகவும், மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து, தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் உள்ளது.

இந்த நீட் தேர்வு என்பது கல்விப் பிரச்சினையோ, மருத்துவர்கள் பிரச்சினையோ, மாணவர்கள் பிரச்சினையோ அல்ல.  அது மாநில உரிமை, சுயாட்சி, கூட்டாட்சி, காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதி தொடர்புடையது ஆகும்.

இந்த தேர்வில் விலக்கு விவகாரத்தில் தீர்வு காணும்வரை எல்லா அரசியல் இயக்கங்களும் உயிர்ப்போடு இயங்கச் செய்யும் வேலையை மாணவர் சமூகம் செய்ய வேண்டும்.  மத்திய அரசு நீட்தேர்வில் இருந்து  பின்வாங்கும் வரை தமிழ்ச் சமூகம் போராட்டத்தைக் கைவிடாது என்று மாணவர்கள் நிரூபிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.