வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் புதிய பார்க்கிங் கொள்கையை தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்போர்ட் அண்ட் டெவலப்மென்ட் என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) இந்த புதிய பார்க்கின் கொள்கையை வடிவமைத்து வருகிறது.
CUMTA திட்டப்படி அனைத்தும் செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மாநில அரசு கொண்டு வர உள்ள இந்த பார்க்கிங் கொள்கையை மூலம் சென்னை மாநகரப் பகுதி முழுவதும் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பார்க்கிங் கொள்கையானது சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தால் (CUMTA) என்ஜிஓ – இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்போர்ட் அண்ட் டெவலப்மென்ட் பாலிசியின் உதவியுடன் வரைவு செய்யப்படும். கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) தயாரித்த முந்தைய வரைவுக் கொள்கை இந்தக் கொள்கையில் இணைக்கப்படும் என்று CUMTA சிறப்பு அதிகாரி ஐ ஜெயக்குமார் தெரிவித்தார்.
“உலக வங்கியின் உதவியுடன் தயாரிக்கப்படும் இந்த பார்க்கிங் மேலாண்மை திட்டத்தின் கீழ் இடங்களைப் பொறுத்து பார்க்கிங் கட்டணம் வேறுபடும். பாண்டி பஜார் போன்ற முக்கிய வணிக பகுதிகளில் கட்டணம் அதிகமாகவும், புறநகரில் கட்டணம் குறைவாகவும் இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சென்னை நகரின் பார்க்கிங் மேலாண்மை திட்ட அறிக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும்” என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உயர்மட்ட கட்டிடங்கள் மற்றும் மால்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியதைத் தொடர்ந்து, பெரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பார்க்கிங் கொள்கையும் அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.
பார்க்கிங் கொள்கையை கொண்டு வருவதற்கு முன், போக்குவரத்தை எப்படி ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை அடுத்து மாநிலம் முழுவதற்குமான பொதுவான பார்க்கிங் கொள்கையை உருவாக்க தமிழக அரசு விரும்புவதாகக் கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளது, அதே சமயம் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 19% மட்டுமே அதிகரித்துள்ளது, இது வாகனங்களின் அதிவேக வளர்ச்சியைக் காட்டுகிறது.
இதனிடையே பார்க்கிங் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் ஏப்ரல் 3 ம் தேதி உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றதாகவும் அதில் சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள சாலைகளில் பெருகிவரும் வாகன நெரிசல் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, நடேசன் பூங்கா, உள்ளிட்ட தி.நகரின் பல இடங்களில் வழக்கு உத்தரவு நடவடிக்கைகளையும் மீறி புற்றீசல் போல் முளைத்திருக்கும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது குறித்தும் அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கான வாகன நிறுத்தம் குறித்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.