சென்னை: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணாக்கர்(இறுதியாண்டு மாணாக்கர் தவிர) குறித்து தமிழக அரசு இந்தாண்டு திடீர் முடிவு மேற்கொண்டதால், படிப்பு முடிந்த வெளிவரும் மாணாக்கரை பணிக்கு எடுக்கும் விதிமுறைகளில் மாற்றங்களை செய்துள்ளன நிறுவனங்கள்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; பொதுவாக, முன்-இறுதியாண்டில் உள்ள மாணாக்கர், பணிக்கு தேர்வுசெய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அரியர் வைத்திருக்கும் மாணாக்கர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், பொறியியல் பிரிவு மாணாக்கரின் அறிவை சோதிக்கும் வகையில், சில கூடுதல் அம்சங்களை சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
“அரியர் வைத்திருந்த மாணாக்கர் ‘பாஸ்’ என்று அறிவிக்கப்பட்டதால், அந்த வகைப்பாட்டின் கீழ்வரும் மாணாக்கரை பணிக்கு எடுக்கையில், நாங்கள் கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு அவர்களின் தரம் மற்றும் திறமையை சோதிப்போம்” என்றுள்ளார் அக்சயா ஹோம்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் சிட்டி பாபு.
நடுத்தர தன்மையுள்ள ஐடி நிறுவனங்கள், இந்தப் பிரிவு மாணாக்கர்களைத் தேர்வுசெய்ய, கட்-ஆஃப் மதிப்பெண்களை அதிகரித்தல் அல்லது தமது சொந்த மதிப்பீட்டு விதிமுறைகளை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்பு திறனுடன் தென்படும் மாணாக்கர்களின் கட்-ஆஃப் விஷயத்தில் சிறிது தளர்வு காட்டப்படும். ஆனால், தற்போதைய புதிய அறிவிப்பால், அந்த சலுகை ரத்தாகிறது என்று கூறப்பட்டுள்ளது.