சென்னை

நிர்வாக குளறுபடியால் கொரோனா தடுப்பூசியைத் தமிழக அரசு வீணாக்கி உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது..  இதில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.   தமிழகத்தில் நேற்று வரை 10.02 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு அடைந்து அதில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.   நேற்றுவரை 9.14 லட்சம் பேர் குணம் அடைந்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.

இதையொட்டி தமிழகத்தில் கொரோனா ஊசி போடும்  பணி தீவிரமாக நடந்து வருகிறது.   ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இந்நிலையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் 12.1% தடுப்பூசிகள் வீணாகி உள்ளன.

இது குறித்து திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டரில், “ போலியோ-மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்துகளைப் பொதுமக்களிடம் சேர்த்ததில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தமிழகம், கொரோனா தடுப்பூசிகளை வீணடித்ததில் முதலிடத்தில் உள்ளது.

ஏப்ரல் வரை நமக்கு அனுப்பப்பட்ட 54.28 லட்சம் தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளது தகவலறியும் உரிமைசட்டம் மூலம் மத்திய அரசு தந்த இத்தகவல், அரசின் நிர்வாக குளறுபடியைக் காட்டுகிறது.

கொரோனா தடுப்பூசிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியை ஒருங்கிணைக்காமல், இறுதிக்கட்ட கொள்ளை-போலி விளம்பரங்களில் கவனம் செலுத்தியதே இதற்குக் காரணம்.

இப்படி மக்கள் மீது அக்கறையற்ற அரசால், கொரோனா 2-ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது” எனப் பதிந்துள்ளார்