சென்னை

னைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினி மயமாக்கத் தமிழக அரசு ரூ.294 கோடிக்கான ஆர்டரை வெளியிட்டுள்ளது.

மொத்தம் தமிழகத்தில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்தன.  தமிழக அரசு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 22-ந்தேதி முதல் 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடியது.  பொதுமக்கள் தரப்பிலும், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரும் இதற்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படுகிறது. இக்கடைகளுக்குத் தேவையான மதுபான வகைகளை 3 வித ஆலைகள் உற்பத்தி செய்கின்றன. இந்தியத் தயாரிப்பில் அயல்நாட்டு மதுபானங்களான பிராந்தி, விஸ்கி, ஓட்கா, ரம், ஜின் போன்றவற்றை மதுபான உற்பத்தி செய்யும் 12 ஆலைகள் உற்பத்தி செய்கிறது. அத்துடன் பீர் வகைகளை 7 ஆலைகளும், ஒயின் வகைகளை 3 ஆலைகளும் உற்பத்தி செய்கின்றன.

மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால், ரசீது தர வேண்டும் என்றும் போலி மதுபாட்டில்கள் நடமாட்டம் இருப்பதால் அதனை ஒழித்து தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையொட்டி தமிழக அரசு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் கணினி மயமாக்க முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்-டெல் நிறுவனம் ரூ.294 கோடிக்குப் பெற்றுள்ளது.