சென்னை

மிழக அரசு இந்த மாதமும் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய்  ஆகியவற்றை இலவசமாக வழங்க உள்ளது.

கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர நாடெங்கும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.   தமிழகத்தில் இதையொட்டி ஏப்ரல் மாதம் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.  இது மே மற்றும் ஜூன் மாதங்களிலும் தொடர்ந்தது.

தற்போது தமிழக அரசு இது ஜூலை மாதமும் தொடரும் என அறிவித்துள்ளது.  இந்த பொருட்களைப் பெற ஜூலை 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளில் டோக்கன் வழங்கப்படும்.  அதில் பொருள் வழங்கும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஜூலை 10 முதல் இந்த டோக்கனை காட்டி ரேஷன் கடைகளில் இந்த பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  கொரோனா அதிகம் உள்ளதால்  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவரவர் வீடுகளிலேயே இந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த பொருட்களை வாங்க வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  சென்னை உள்ளிட்ட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிப்போர் ஜூன் மாத ரேஷன் பொருட்களை ஜூலை 10 வரை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.