சேலம்: காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை மற்றும் அவர்களின் கல்வி திறன் அதிகரித்துள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அரசு பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை இன்று ஆய்வு செய்ததுடன், அங்கு வழங்கப்படும் காலை உணவை ருசித்து பார்த்தார். தொடர்ந்து தானே  காலை உணவை மாணவ மாணவிகளுக்கு பரிமாறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதல்-மைச்சரின் உன்னதமான திட்டம்.  இந்த திட்டம் முதலமைச்சர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இருந்தே இங்கு தயாரிக்கப்படும் உணவு கொண்டு செல்லப்படும் விதம், மாணவர்களுக்கு சாப்பாடு வழங்குவது உட்பட அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளை சேர்ந்த 5444 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். முதல்-அமைச்சர் அறிவித்தபடி 2023 -2024 -ம் ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இந்த திட்டத்தால் மாணவர்கள் கல்வி திறன் அதிகரித்துள்ளதுடன் மாணவர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது .  சேலம் மாவட்டத்தில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களையும் பள்ளியில் சேர்த்து இந்த திட்டத்தில் பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணங்கள் சில மாவட்டங்களில் நடைபெறுகிறது. 18 வயதுக்கு குறைவான திருமணங்கள் அனைத்தும் குழந்தை திருமணங்கள் தான் . அவை சம்பந்தப்பட்டவர்கள் மூலமாகவும் ,வேறு நபர்கள் அளிக்கும் தகவல் மூலமாகவும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கோவில்களில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணங்கள் நடத்தப்படுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன் கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி, மாநகர தி.மு.க. செயலாளர் ரகுபதி, வார்டு கவுன்சிலர் சங்கீதா நீதி வர்மன், முன்னாள் வார்டு செயலாளர் நீதி வர்மன், மதுசூதனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

[youtube-feed feed=1]