சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில், 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகஅரசு, ஏற்கனவே அரசு பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில்  1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை சோதனை முறையில் தமிழக அரசு தொடங்கி உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் சிற்றுண்டி சமைத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.  அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சுய உதவி குழுக்கள் மூலமாக சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 10 குழந்தைகள் முதல் 600 குழந்தைகளுக்கு தேவையான உணவு தினசரி தயாரிக்கப்பட வேண்டும்.

இதற்காக கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்புடன் கூடிய சமையல் கூடங்கள், கியாஸ் சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு போன்றவை வழங்கப்படும்.

சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக்குழுவுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.

காலை 5.30 மணிக்கு சமையல் பணியை தொடங்கி காலை 7.45 மணிக்குள் முடிக்க வேண்டும்.

சமைத்த உணவை காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.