சென்னை:
மேகேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடகாவின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அமைத்து 67.16 டி.எம்.சி. நீரை சேமிக்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கவும் ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலானத் திட்டத்தைத் தயாரித்துள்ள கர்நாடக அரசு, தற்போது நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதால், மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு தற்போது ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரச இதில் திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட வேண்டும். கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடித்திட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.