TN govt set to denotify Anna Salai as ahighway to reopen bars?

 

சென்னை அண்ணாசாலையில் உள்ள மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் வகையில், அதனை மாநில நெடுஞ்சாலையாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. சென்னையில் மட்டும் 315 மதுக்கடைகள் உள்ளன. அவற்றில் சுமார் 68 மதுக்கடைகளும், பார்களும் மூடப்பட்டன.  கிண்டி லீ ராயல் மெரிடீயன், அண்ணா சாலையில் உள்ள பழமைவாய்ந்த காஸ்மோபாலிடன் கிளப், ஜிம்கானா கிளப், ரெயின் ட்ரீஹோட்டல், ஹயாத் ஹோட்டல், வடபழனி விஜயா பார்க் உள்ளிட்ட பல இடங்களில் பார்கள் மூடப்பட்டன.

 

இப்படி பழமையான பார்கள் மூடப்பட்டதால், சில விஐபிக்களே பொழுதுபோக்காக மதுபானம் அருந்த இடமின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டதாக புலம்பித் தவித்தனர். இதன் எதிரொலியாக சென்னை அண்ணாசாலையை தேசிய நெடுஞ்சாலை என்ற தரத்தில் இருந்து குறைத்து, சாதாரண மாநிலச் சாலையாக அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அப்படி அறிவிக்கப்பட்டால், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் வழக்கம் போல, மதுபானக் கடைகளும், பார்களும் இயங்கத் தொடங்கும். இதற்காக சென்னை முதல் செங்கல்பட்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையை, மாநிலச் சாலையாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பொன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

 

ஆனால், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலைப் பகுதி 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும், அதில் தமிழக அரசு தலையிட முடியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி அப்படி அறிவித்தால், தமிழகத்தில் உள்ள 3ooo கிலோ மீட்டர் தொலைவுள்ள ஒட்டு மொத்த தேசிய நெடுஞ்சாலையையும், மாநிலச் சாலையாக அறிவிக்க வேண்டுமே அன்றி, அண்ணாசாலையை மட்டும் மாற்றி அறிவிக்க முடியாது என்றும் அந்த அதிகாரிகள் கூறுகின்றனராம். என்ன நடக்கும் என்று தெரியவில்லை.

 

ஆக, சென்னையில் மீண்டும் முக்கிய சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளைத் திறப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவே தெரிகிறது. மதுக்கடைகளை மூடுவோம்னு ஒருபுறம் அறிவித்து விட்டு, மூடிய கடைகளைத் திறக்க முயற்சி எடுக்கும் தமிழக அரசின் முரண்பாடான போக்கு, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன செய்ய… மதுக்கடைகளை படிப்படியா மூடுவோம்னு அறிவித்தவர் தற்போது உயிருடன் இல்லையே…!