சென்னை

கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குத் தொழிற்சாலை தொடங்க கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நிலம் ஒதுக்கத் தமிழக அரசு முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 வருடங்களுக்கு முன்பு தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது தொழிற்சாலையை தொடங்க உள்ளதாகக் கூறப்பட்டது.   ஆனால் அந்த தொழிற்சாலை ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டது. இதற்குத் தமிழகத்தில் மிகவும் ஊழல் உள்ளதால் நிறுவனம் இந்த முடிவு எடுத்ததாக சமூக வலைத் தளங்களில் பேசப்பட்டன.

ஆனால் அப்போதைய தமிழக தொழில்துறை தலைமைச் செயலர் ஆதுல்ய மிஸ்ரா இதை மறுத்தார்.   அவர், ”கியா மோட்டார்ஸ் துணை நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம் தனது தொழிற்சாலையைச் சென்னையில் நடத்தி வருகிறது.   ஆகையால் அந்த நிறுவனக் கொள்கையின்படி தமிழகத்தில் மற்றொரு தொழிற்சாலையைத் தொடங்கவில்லை” என கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையைத் தொடங்கி உள்ளது.  இந்த தொழிற்சாலை இரு வருடங்களாகக் கட்டப்பட்டுள்ளது.  தற்போதைய ஆந்திர அரசு முந்தைய அரசின் பல ஒப்பந்தங்களையும் அந்த அரசு அளித்த சலுகைகளையும் ரத்து செய்து வருகிறது   இதையொட்டி கியா மோட்டார்ஸ் தனது தொழிற்சாலையைத் தமிழகத்துக்கு மாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கியா மோட்டார்ஸ் தரப்பில் இந்த தகவலை மறுத்தனர்.  இந்நிலையில் மூத்த தமிழக அரசு அதிகாரி ஒருவர் கியா மோடார்ஸ் நிறுவனத்துக்குச் சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் பகுதியில்  நிலம் அளிக்கத் தமிழக அரசு முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாகவும் கூறி உள்ளார்.