சென்னை: பாலில் கலப்படம்  செய்யப்படுவதை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழ்நாடு அரசு  முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

முன்மொழியப்பட்ட இந்தக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து, பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறிய தனியார் நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் மற்றும் பிற வாங்குபவர்களுக்கு நேரடியாகப் பாலை விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் பல்வேறு தனியார் பால்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அரசு விற்பனை செய்யும் ஆவின் பாலுக்கு தனி மவுசு உண்டு. இந்த நிலையில், கலப்பட பால் விற்பனையை தடுக்கும் வகையில், புதிய பால் கொள்கையை வெளியிட தமிழ்நாடு அரசு  முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில்  தற்போதைய நிலையில், தினசரி  3 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 36 லட்சம் லிட்டா் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதவிர தனியாா் நிறுவனங்கள் தினமும் 75 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்கின்றன.

இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால்கள்   இடைத்தரகா்கள் மூலம் பெறப்பட்டு பதப்படுத்தப்பட்டு பின்னர், தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கிடையில் பாலில் கலப்படம் செய்யப்படுவதாகபும் புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு   விற்கப்படும் பால் மற்றும் பால் பொருள்களில் கலப்படம்  இருப்பதாகவும், விரைவில் கெட்டுப்போவது  உள்பட  ஏராளமான  புகாா்கள் வருகின்றன.

இதையடுத்து, பாலில் கலப்படம் செய்யப்படுவதை,  தடுக்கவும், இடைத்தரகா்கள் இல்லாத பால் கொள்முதலை அதிகரிக்கவும் புதிய பால் கொள்கையை வெளியிட தமிழ்நாடு பால் வளத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கூறிய ஆவின் நிறுவன அதிகாரிகள், : பால் உற்பத்தியாளா்களிடமிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்படும் பால், ஆவின் நிறுவனத்துக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. சுமாா் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டா் வரை கொள்முதல் செய்யும் பல சிறிய தனியாா் நிறுவனங்கள் இடைத்தரகா்களிடமிருந்தே பாலை கொள்முதல் செய்கின்றன.

ஆனால், தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய பால் கொள்கையின்படி, சிறிய அளவில் பால் கொள்முதல் செய்யும் தனியாா் நிறுவனங்கள் நேரடியாகவே கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்ய முடியும். இதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இதுதவிர, கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதலை ஒழுங்குபடுத்தவும், தரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், உற்பத்தி முதல் நுகா்வு வரை கண்காணிப்பை மேம்படுத்தவும் இந்த புதிய கொள்கை வழிவகுக்கும். இதுமட்டுமன்றி, கலப்படம் செய்பவா்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கவும் இது உறுதி செய்வதுடன், பால் மற்றும் பால் பொருள்களின் நுகா்வோரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாகவும் இது அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]