சென்னை

மிழகத்தில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு கட்டிடத்தையும் வாடகைக்கு அளிக்கும் போது அந்த ஒப்பந்தம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.

கடந்த 2011 ஆம் வருட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 23.4% பேர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதை ஒட்டி கடந்த 2017 ஆம் வருடம் தமிழக அரசு வாடகை சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. கடந்த வருடம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விதிமுறைகளை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த வாடகைச் சட்டம் 2017 என்பது முந்தைய தமிழ்நாடு கட்டுமான வாடகை மற்றும் குத்தகை சட்டம் 1960 ஐ ரத்து செய்கிறது. முந்தைய சட்டத்தின்படி வாடகை ஒப்பந்த பத்திரம் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டு வாடகை ஒப்பந்தம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு புதிய இணைய தளத்தை துவக்கி உள்ளார். www.tenancy.tn.in என்னும் அந்த தளத்தின் மூலம் வாடகை ஒப்பந்தகளை சம்பந்தபட்ட வாடகை அதிகாரிகளிடம் பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியரின் கீழ் இயங்க உள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் இனி வாடகைக்கு விடப்படும் எந்த ஒரு கட்டிடத்துக்கும் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அதை பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்கள் தங்கள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.