சென்னை

மிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியா முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.  அகில இந்திய அளவில் பாதிப்பில் தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.   இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 18,692 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 11,66,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தற்போது 1,15,128 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   கொரோனா பாதிப்புக்குள்ளான பலரும் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி இல்லாததால் அனுமதிக்குக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..   இரண்டாம் அலை கொரோனா மிகவும் கடுமையாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

அரசு தரப்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஏற்கனவே நிரம்பி உள்ளன.  அத்துடன் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களிலும் புது நோயாளிகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.