சென்னை
தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரள மாநில மாணவர்கள் குறித்து அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலம் கொரோனா தினசரி பரவல் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. நேற்று இங்கு 19,622 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,27,030 ஆகி உள்ளது. இதில் நேற்று 132 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,673 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 22,563 பேர் குணமடைந்து மொத்தம் 37,96,517 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,09,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி தமிழக அரசு பல வழிமுறைகளை அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் பல மாணவ மாணவியர்கள் தமிழக கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். தற்போது அவர்களுக்காக புதிய உத்தரவு ஒன்றை அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி, “தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தொற்றுப் பரவல் நிலையினை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் இருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன் ஆர்டி பிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதைச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.