சென்னை: தமிழ்நாட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI மையமாக மாற்றும் புதிய பணிக்காக அரசு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பிரிவின் மையமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்காக முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 13.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு, கல்வியாளர்கள், பயனர் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர்களின் நலன்களுக்காக இணைக்கவும் ஒத்துழைக்கவும் இந்த பணி ஒரு தளத்தை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
உலக முழுவதும் சமீப நாட்களாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தான் பரவலாக பேசப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு வியத்தகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசும், செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது . இதன் தலைவராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட ஆவணத்தை தமிழ்நாடு மின் ஆளுகை முகமை தயாரித்துள்ளது .
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தில் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களும், இந்த துறை சார்ந்த நிபுணர்களும் , செயற்கை நுண்ணறிவு துறையில் தற்போது இயங்கி வரக்கூடிய நபர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட உள்ளனர். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் நோக்கமே “Social good by design” என்பது ஆகும்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தின் அடிப்படையில் ஆளுமை தொடர்பான பிரச்சனைகளுக்கு ஏஐ தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும் என்றும் இதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திறமையான நிர்வாகத்தை வளர்க்க முடியும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ்நாட்டில் புதிய சாதனை படைக்க திட்டமிடும் ஆப்பிள்..! ” அரசு துறை சார்ந்தவர்கள் மற்றும் தனியார் துறையை சார்ந்தவர்கள் கல்வி நிறுவனங்களை சார்ந்தவர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து பங்களிப்பு தரக்கூடிய ஒரு இயக்கமாக இந்த இயக்கம் இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட கணினி உள்கட்டமைப்புகள் ,டேட்டா மையங்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கான அனைத்து வசதிகளையும் இந்த இயக்கம் செய்து தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் நிர்வாகத்தை எளிமைப்படுத்துவது ,குடிமக்களிடையே மின் ஆளுமை பரவலை விரைவுப்படுத்துவது ,தமிழகத்தை ஒரு மேம்பட்ட சமுதாயமாக உருவாக்க அரசுக்கு உதவும் கொள்கைகளை உருவாக்குவது என ஆகியவற்றில் கவனம் செலுத்த இருக்கிறது.
அனைத்து அரசு துறைகளிலிருந்தும் தரவுகளை ஒருங்கிணைத்து துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தி தொழில்நுட்ப நிபுணர் குழுக்களை உருவாக்கி கூட்டு பணிமனைகள் அல்லது கருத்தரங்குகள் மூலம் ஏஐ பயன்பாடுகளை உருவாக்குவதே இதன் உத்தியாக இருக்கும் என அரசு கூறியுள்ளது.