சென்னை:
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறுபவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில் பலர் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வருகின்றனர்.
அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தெர்மல் ஸ்கீரின் சோதனை நடத்தப்பட்டு, அவர்களின் கைகளின் முத்திரை குத்தப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தலின் கீழ் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், கடந்த வாரம், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 4,253 ஆக இருந்த நிலையில், தற்போது, அது, 8,950 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளவர்கள், நெறிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.