சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு,  தமிழகம் முழுவதும் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்களும் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக அலவலர்களின் பணி நேரம் விரயமாகிறது. இதையடுத்து  உதவியாளர்களை விரைவில் நியமிக்க வேண்டும் என விஏஓக்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  தமிழகம் முழுவதும்  காலியாக கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,  3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, தமிழகம் முழுவதும் விரைவில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கிராம உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் அந்த தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கிராமத்திற்குள் வசிப்பவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பணியிடங்கள் நிரப்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அது வெளியான பிறகே, இந்த பணிக்கான தகுதி மற்றும் வயது வரம்பு போன்றவை தெரிய வரும்.

ஏற்கனவேதமிழக அரசின் வருவாய்துறை செயலாளர் அமுதா கிராம உதவியாளர் தேர்வு முறைகள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அந்த வழிகாட்டுதல்கள் இதற்கு பொருந்துமான என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.

ஏற்கனவே வெளியான அறிவிப்பில்,  கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அதேன் விவரம் வருமாறு

கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, கல்வித் தகுதியில், பத்தாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியலை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

பைக் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்து இருந்தால் அதற்கு தேர்வு நடத்த வேண்டியது இல்லை.

சைக்கிள் அல்லது பைக் ஓட்டுவதற்கான திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்த வேண்டும். இதற்கு பத்து மதிப்பெண் வழங்க வேண்டும்.

தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண்டும்.

நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதிக்காட்ட வேண்டும். தொடர்புடைய கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் வழங்க வேண்டும். அல்லது தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண் வழங்கப்படும்.

இண்டர்வியூ என்பது வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரைக் கொண்ட குழுவினரால் நடத்தப்படும்.

விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6, அதிகபட்சம் 12 மதிப்பெண் வரை வழங்கலாம். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் 6-ஐ விட குறைவாகவோ, 12-ஐவிட அதிகமாகவோ மதிப்பெண் வழங்கக்கூடாது.

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் உரிய விதிகளை பின்பற்றி வெளியிட வேண்டும். இதனை மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

தேர்வு முறையானது உரிய விதிகளை பின்பற்றி நடைபெற்றுள்ளதை அந்தந்த மாவட்ட கல்டெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேர்வுக்கான முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த விதிகளில் மீறினால் அனைத்து அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் இந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.