சென்னை: தமிழக அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது, அது அவசியம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 5402 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, இதில் ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 110 முதல் 120 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. 2017-18ஆம் நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் 26,797.96 கோடி ரூபாயாகப் பெற்ற வரி வருமானம் 2022-21ல் 33,811.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் நிதிநிலையை தீர்மானிப்பதில் டாஸ்மாக் நிறுவனமே முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், தமிழகஅரசியல் கட்சிகள் மதுவை ஒழிப்போம், மதுக்கடைகளை மூடுவோம் என ஒவ்வொரு தேர்தலின்போது அறிவிப்பதும், வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், மதுக்கடைகளை மூடாமல் மக்களை ஏமாற்றுவதுமே வாடிக்கையாகி வருகிறது. இதற்கு காரணம் பெரும்பாலான மதுபான ஆலைகள் திமுக, அதிமுக கட்சிகளை சேர்ந்தவர்களுக்கே இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

தமிழக அரசுக்கு வருவாய் குறிப்பிட்ட 3 முறைகளில் இருந்து மட்டுமே வருகிறது. முதலாவது, பெட்ரோல் டீசல் மீதான வரி, இரண்டாவது பத்திர பதிவுத்துறை, 3வது டாஸ்மாக்  இந்த மூன்று துறைகளில் இருந்து மட்டுமே தரக்கூடிய வருவாயானது தமிழ்நாடு அரசனுடைய மற்ற அனைத்து திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகஅரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் டாஸ்மாக் விற்பனை மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.33,811 கோடி வரி செலுத்தி யுள்ளது. இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட 5.1 கோடி கேஸ்கள் ஐஎம்எஃப்எல் (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்) மற்றும் பீர் ஆகியவை டாஸ்மாக் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டாஸ்மாக் வருமானத்தை பெருக்கும் வகையில், பிடிஆர் பழனிவேல்ராஜன், தமிழக அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு என தனிச்சிறப்பு உண்டு.  உலகளாவிய திறமைகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனால், சென்னை போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்களின்  இரவு வாழ்க்கை, பொழுதுபோக்கு, மதுக்கடைகள் முக்கியமாக இருப்பதால்,  மதுக்கொள்கையில் மறுசீரமைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.