சென்னை: 5G ஏலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.

மத்தியஅரசு சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விட்டது. 5ஜி அலைக்கற்றை மொத்தம் 72ஆயிரத்து 98மெகா ஹெர்ட்ஸ்.  ஏலத்தில், 7சதவீதம் அதாவது 51ஆயிரத்து 236மெகா ஹெர்ட்ஸ் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இது 1லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், ஜியோ நிறுவனம்  88,078 கோடி ரூபாய்க்கு  5ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக 43,084 கோடி ரூபாய்க்கு ஏர்டெல் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடிக்கும், அதானி நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கும் அலைக்கற்றை உரிமங்களை வாங்கியுள்ளன. மேலும், 5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் அஸ்விணி வைஷ்ணவ் கூறினார். இந்த ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக எம்.பி. ராஜா குற்றம் சாட்டி உள்ளார். அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறுவதற்கு முன்பு, இந்த ஏலம் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும் என மத்திய அமைச்சர்கள் சிலர் ஆரூடம் கூறினர். ஆனால் தற்போது இந்த ஏலம் மூலம், 1,50,173 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்திருப்பதாக மத்திய பாஜக அரசு அறிவித்திருப்பது நாட்டுமக்களுக்கு பேரதிர்ச்சி அளித்திருக்கிறது. மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த நிறுவனத்தில் பங்கேற்காமல், முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி ஏலத்தில் பங்கேற்றது, மோடி அரசின் பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.

முன்னர் 4ஜி அலைக்கற்றை ஏலம் நடந்தபோது அரசுக்கு கிடைத்த வருவாயை ஒப்பிடுகையில், 5ஜி ஏலத்தில் 134 மடங்கு அதிக வருவாய் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் 5ஜி ஏலத்தில் மத்திய அரசுக்கு கிடைத்ததோ சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. அதாவது 5ஜி ஏலத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி  அளவிற்கு மோசடி நடந்துள்ளது.  அரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய லட்சக்கணக்கான கோடி ரூபாயை, இந்த மோசடி மூலம் சில தனியார் நிறுவனங்களுக்கு மத்திய பாஜக அரசு மடைமாற்றிவிட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றை மூலமே செல்போன் சேவையை வழங்க நிர்பந்திக்கும் மத்திய பாஜக அரசு, தனியார் நிறுவனங்களைப் போல் அதி நவீன 4ஜி சேவையை பிஎஸ்என்எல். வழங்க அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நிச்சயம் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணையிலிருந்து மத்திய பாஜக அரசு தப்ப முடியாது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.