சென்னை

கொரோனாவால் மரணம் அடைந்துள்ள தமிழக காவல்துறையினரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் பல அரசு அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  இதில் பல காவல்துறையினரும் அடங்குவர்.  இவர்களில் பலர் தங்கள் பணியின் போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர்.  இது குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழகத்தில் கோவிட் 19 நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதத்தில் அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் தீவர பணிபுரிந்து வருகின்றனர்.  இதனால் நோய்த் தொற்று உண்டாகி பலர் உயிர் இழந்துள்ளனர்.  தமிழகக் காவல்துறையில் மட்டும் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 84 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இவ்வாறு உயிர் இழந்தவர்களில் 13 பேர் குடும்ப வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் என ரூ3.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 71 நபர்களில் 38 பேருக்கான முன்மொழிவு பெறப்பட்டுள்ளது.  அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் நிவாரண தொகை வழங்கத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  எஞ்சியுள்ளவர்களுக்கு முன்மொழிவு கிடைத்த உடன் அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.