சேலம்: ராஜீவ் கொலை குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு மீண்டும் அழுத்தம் கொடுப்போம் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சேலத்தில் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சிறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆய்வு முடிந்து வெளியே வந்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,
சேலம் மத்திய சிறையில் 1351 கைதிகள் உள்ளனர். பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர். எப்போதும் 800 கைதிகள் வரை மட்டுமே மத்திய சிறையில் இருக்கும் நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. சிறைக் கைதிகளின் நிலவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், சிறையில் உள்ள கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக கூறியவர், மத்திய சிறையில் கைதிகள் பணியாற்றும் வகையில் பல தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு தயாரிக்கப்படும் பிரெட், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்ற தொழில்கள் மூலம் ஒவ்வொரு கைதியிம் மாதம் 6ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர் என்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், அண்ணா பிறந்தநாளைக்கு விடுதலை செய்யப்படும் கைதிகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கையை தமிழகஅரசு எடுத்து வருவதாகவும், சேலம் சிறையில் இருந்து, நன்னடத்தை அடிப்படையில் 60 பேரின் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
ராஜீவ்கொலை வழக்கு கைதிகள் விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில்7 உச்ச நீதிமன்றம் நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநரிடம் தெரிவித்திருந்தோம் மீண்டும் இது குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றார்.