வேலூர்

ன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார்.

கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின்,-

”இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது. சமூகநீதி காற்றில் பறக்கக்கூடாது. மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காகத்தான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

பிரதமர் மோடியால் மக்களிடம் தன்னுடைய ஆட்சி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை. பழைய சம்பவங்களைப் பற்றி பொய்யான கதைகளைச் சொல்லி, அதன் மூலமாக மக்களைக் குழப்பி, ஏமாற்றி, தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா? என்று முயற்சி செய்கிறார்.

நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்ததும் எவ்வளவு பெரிய தவறு என்று பா.ஜனதா விரைவில் உணரத்தான் போகிறது. 

சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், சட்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம். இந்த அநீதிகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லோரும் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். 

நாம் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டுப் பார்த்தோம். தரவில்லை. நாளை (இன்று) காலை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போகிறோம், இதைப் போல் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு பாஜக அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வறட்சி நிவாரணம் கோடி வழக்கு தொடுக்க உள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சிகள் இந்தச் சர்வாதிகார ஆட்சியைத் தொடர விடமாட்டார்கள்’ 

என்று தெரிவித்துள்ளார்.

இதையொட்டி இன்று காலை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு எதிராக வழக்கு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தமிழக அரசின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.