சென்னை: மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தைத் தவிர்க்க, வாய்ப்புள்ளவர்களுக்கு, வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க, தமிழக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கோயம்பேடு பகுதியில் உதவிக் கமிஷனராக இருந்த முத்துச்சாமிக்கு(ஐபிஎஸ்) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் தோட்ட அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சை எடுத்தப்பிறகு, பின்னர் வீட்டிற்கு திரும்பி தனிமைப்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார்.
அதன்படியே, தற்போது அவர் தனது அறையில் தனித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் நண்பர்களுடன் பேசுவது என்று பொழுதை கழிக்கிறார். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு வந்து பரிசோதிக்கிறார்கள்.
மே 18ம் தேதி அவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெறும். அதனையடுத்து, அவரின் தனிமைப்படுத்தல் முடிவுக்கு வரும்.
சாதாரண அறிகுறிகள் கொண்ட நோயாளிகளை வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்க அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, மருத்துவமனைகளில் குவியும் கூட்டத்தைத் தடுக்கும் வகையில், வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை வழங்குவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.